புழுக்கு
கேரள சாப்பாட்டிற்குள்ள (சத்யா) துணைக்கறிகள் அவியல், தோரன், எரிசேரி, ஓளன், தீயல், என்பவை.
இவை அல்லாமல் கேரள கஞ்சிக்கு என்று ஒரு சிறப்பு துணைக்கறி உண்டு. அது தான் புழுக்கு. நெல்லை புழுங்கி உண்டாக்குவது புழுங்கல் அரிசி. அது போல் கிழங்குகளை புழுங்கி உண்டாக்குவது புழுக்கு.
அடுத்துள்ள ஈழவர் (நாராயண குருவை பின் பற்றுபவர்கள்) குடும்பங்கள் நீத்தார் நினைவு நாளன்று முன்னோர்களுக்கு கஞ்சியும், புழுக்கும், மாங்காய் ஊறுகாயும் படைத்து, அடுத்துள்ளவர்க்கு தந்து உண்பர்.
சாதாரணமாக உருளைக்கிழங்கு தவிர்த்து, மரவள்ளி, வாழைக்காய், சேனை, சேம்பு, காய்ச்சில், சிறுகிழங்கு, கூர்க்கன் கிழங்கு, சர்க்கரைவள்ளி போன்றவற்றை வேவித்து (புழுங்கி) செய்யப்படும் ஒரு கறிவகை தான் புழுக்கு. எல்லா கிழங்குகளும் வேண்டும் என்பது இல்லை, உள்ளது போதும், இவற்றை குழைத்து சேர்த்து வைப்பது, மத்தங்காய் (பரங்கிக்காய்), மற்றும் தேங்காய் அரவை. கூடுதலாக கருப்பு கொண்டைக்கடலை, சேர்க்கப்படும். கிட்டத்தட்ட எரிசேரி போன்றது தான்.
ஒரு துண்டு மரவள்ளி (மரசீனி, கப்ப, குச்சி கிழங்கு) இருந்தது. புழுக்கு செய்யலாம் என்று ஒரு தோணல். மேலும் ஊறவைத்த கொண்டைக்கடலை பிரிட்ஜ்ல் இருந்தது. ஆக கிடைத்த/எடுத்த பொருட்கள்:
படம் கீழே.
எடுத்துக்கொண்ட காய்வகைகள்.
மரவள்ளி கிழங்கு 1 துண்டு
சேனை கிழங்கு 1 துண்டு.
வாழைக்காய் 1 துண்டு
வெள்ளை கொண்டை கடலை 1 கப் (கருப்பு கடலை இல்லை. வெள்ளைக்கடலை பாணி பூரிக்கு ஊறவைத்தது இருந்தது)
பரங்கிக்காய் 1 துண்டு.
.
இவ்வாறு காய்களை/கிழங்குகளை எடுத்துக்கொண்டு மளிகைக்காக பாஸை நாடினேன். பாஸ் எடுத்து வைத்த மளிகை சாமான்கள் படம் கீழே.
மிளகு, சீரகம், மிளகாய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பூண்டு.
இதைப் பார்த்து எனக்கும் பாசுக்கும் இடையே பட்டிமன்றம் தான் . நான் “பூண்டு சேர்ப்பதில்லை, மிளகு சீரகம் மட்டும் போதும்.” என்று வாதிக்க பாஸ் “உங்களுக்கு ஒன்னும் தெரியாது (Boss is always right !!☹️), நீங்க போய் உங்க கம்ப்யூட்டரை நோண்டுங்க” என்று அடுக்களையில் இருந்து ‘getout’ சொன்னார். பின் சாப்பிட வந்தபோது செய்யப்பட்ட புழுக்கை மொபைலில் படம் பிடித்தேன்.
காய்களை/கிழங்குகளை/கடலையை குக்கரில் வேக வைக்கவும். ஆறியபின் வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு மிக்ஸியில் அரைத்த மிளகு, சீரகம், தேங்காய் துருவல் இவற்றை சேர்த்து, வெந்த காய் கலவையை போட்டு பிரட்டி எடுத்தால் போதும். பாஸ் கூடுதலாக பூண்டை அரவையில் சேர்த்திருக்கிறார். கடுகு, கறிவேப்பிலை,காயப்பொடி வற்றல் மிளகாய் தாளித்து கொட்டியிருக்கிறார்.
சுவைக்கும் வாசனைக்கும் சுக்குப்பொடி சேர்ப்பது உண்டு. பாஸ் சுக்குபொடியும் இல்லை, சொக்குபொடியும் இல்லை என்று கூறிவிட்டார். சுக்குப்பொடி சேர்த்ததை சாப்பிட்டிருக்கிறேன். தற்போது செய்த புழுக்கு ஓகே ரகம்.
வெயில் புழுக்கம் தாங்க முடியலை. இதுல சமையலிலும் புழுக்கா ?
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு